ஜி கார்னர் பகுதியில் சுரங்கப்பாதை மற்றும் திருவெறும்பூரில் ரயில்கள் நின்று செல்ல துரைவைகோ கோரிக்கை!

இது தொடர்பாக 11.01.2025 அன்று நடைபெற்ற DISHA இரண்டாவது கூட்டத்தில் பேசப்பட்டது. அப்போதே, G கார்னர் பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பிறகு, 25.01.2025 அன்று தென்னக ரயில்வே அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் ஆகியோரை ஒருங்கிணைத்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண என்ன வழிகள் உள்ளன என்பது குறித்து ஆராயப்பட்டது. அப்போது, ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை, போக்குவரத்து காவல் ஆகிய மூன்று துறை அதிகாரிகளும் சேர்ந்து சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகளை தொடங்கினார்கள்.
06.02.2025 அன்று இயக்கத் தந்தை தலைவர் வைகோவை அழைத்துக்கொண்டு ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தேன். ஜி-கார்னர் பகுதியில் விரைந்து சுரங்கப்பாதை அமைக்க திட்டம் தயாரித்து, நிதி ஒதுக்கீடு செய்து, கட்டுமானப் பணிகளை தொடங்க வழி செய்யுமாறு கேட்டுக்கொண்டேன்.
22.02.2025 அன்று மதுரை கோட்ட அலுவலகத்தில் தேசிய நெடுஞ்சாலை துறை மண்டல அலுவலர் கோவிந்தராஜனையும், தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் பிரவீன் குமாரையும் சந்தித்து இதுகுறித்து பேசினேன். ஜி கார்னர் பகுதியில் (Vehicle Under Pass - VUP) எனப்படும் வாகனச் சுரங்கப் பாதை அமைக்க தேவையான கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
27.02.2025 அன்று NHAI மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் இணைந்து, நில-அளவையாளர் (Surveyor) மூலம் வாகன சுரங்கப்பாதைக்கு தேவைப்படும் நிலங்களை கணக்கிடும் பணி நடைபெற்றது. கோரிக்கை வைத்த நாள் முதல் இன்று வரை அதற்கான முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
இதனைத்தொடர்ந்து நேற்று மாலை 4 மணியளவில் திருச்சி கோட்ட ரயில்வே அலுவலகத்தில் ஒரு முக்கியமான சந்திப்பு நடைபெற்றது. திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், விரிவான திட்ட அறிக்கை வழங்கும் நிறுவன உயர் அதிகாரிகள் ஆகியோர் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர்.
ஜி-கார்னரில் சுரங்கப்பாதை அமையும் வரை முயற்சிகள் தொடரும். அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பணிகள் முன்னேறிச் செல்லும் என்று உறுதியாக கூறப்பட்டுள்ளது. இதேபோல் திருச்சி கோட்ட ரயில்வே அலுவலகத்தில் DRMஐ சந்தித்து, திருவெறும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டுக்கான சில கோரிக்கைகள் அடங்கிய கடிதம் கொடுக்கப்பட்டது.
அதில், சோழன் விரைவு ரயிலை திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்திச் செல்ல ஏற்கனவே ஒப்புதல் அளித்தும் இதுவரை நிறுத்தப்படவில்லை. எனவே, உடனடியாக அதை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும், செம்மொழி, எர்ணாகுளம் - காரைக்கால், இராமேஸ்வரம் - திருப்பதி, இராமேஸ்வரம் - சென்னை ஆகிய விரைவு ரயில்களையும் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. திருவெறும்பூர் பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் செல்வதற்கு ரயில்வே காம்பவுண்ட் சுவர் ஒட்டிய பாதை தற்போது திறக்கப்பட்டுள்ளது. அந்தப் பாதையில் மாநகராட்சி தார்ச் சாலைக்கும், ரயில் நிலைய இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் தளத்திற்கும் இடையில் சுமார் 130 அடி மண் தரையாக உள்ளது. அந்த இடத்தில் சாலை அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையின் அவசியத்தை எடுத்துரைத்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....