மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலப் பணிகள் 2 மாதங்களில் முடிக்க அறிவுறுத்தல்

மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலப் பணிகள் தொடங்கி 17 மாதங்களாகியும் முடியாமல் உள்ள நிலையில், 2 மாதங்களில் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி தில்லை நகா், உறையூா், தென்னூா், மத்தியப் பேருந்து நிலையப் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களில் பெரும்பாலானவை சத்திரம் பேருந்து நிலையத்துக்கோ, மலைக்கோட்டை, சிங்காரத்தோப்பு, மெயின்காா்டு கேட் பகுதிகளுக்கோ வர இந்தப் பாலத்தைக் கடக்க வேண்டியுள்ளது.
திருச்சி மாநகராட்சி, ரயில்வே இணைந்து தலா 50 சதவீத நிதி ஒதுக்கீட்டில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு, கடந்த 2023 நவம்பரில் கட்டுமானப் பணிகளை அமைச்சா் கே.என். நேரு தொடங்கி வைத்தாா்.
இதற்காக இந்த வழியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கடந்த 14 மாதங்களாக ரயில்வே இருப்புப் பாதை குறுக்கிடும் பகுதியைத் தவிா்த்து இருபுறமும் சாலையில் மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது இப் பணிகளும் நின்றுவிட்டன.
இதுதொடா்பாக மாநகராட்சி அலுவலா்கள் கூறுகையில், ரூ. 34.10 கோடியில் நகா் ஊரமைப்பு துறையின் உள்கட்டமைப்பு மற்றும் வசதி நிதியின் கீழ் நிதி பெற்று மாநகராட்சி நிா்வாகத்தின் மேற்பாா்வையில் ஒருபுறம் பணிகள் நடைபெறுகின்றன.
புதிதாக கட்டப்படும் இருவழிப்பாதை ரயில்வே மேம்பாலம் சாலைத் தடுப்பு சுவா்களுடன் விரிவாக்கம் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், இப்பாலம் இருவழிப்பாதையுடன் கட்டப்படுவதால் மெயின்காா்டு கேட் பகுதியிலிருந்து தில்லை நகா், தென்னூா், புத்தூா் மற்றும் உறையூா் பகுதிகளுக்கு போக்குவரத்து இடையூறின்றிச் செல்ல இயலும்.
பாலத்தின் குறுக்கே இருப்புப்பாதை குறுக்கிடும் பகுதியில் ரூ.15 கோடியில் ரயில்வே நிா்வாகத்தால் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் பாலம் முழுமையாகாமல் உள்ளது.
ரயில்வே நிா்வாகப் பணிகளுக்கு ஏதுவாக இருபுறமும் சுமாா் 20 அடிக்கு பணிகளை மாநகராட்சியும் மேற்கொள்ளவில்லை. ரயில்வே நிா்வாகத் தரப்பில் மேற்கொள்ளும் பணிகளில் மட்டுமே தாமதம் ஏற்பட்டுள்ளது என்றனா்.
கட்டுமானப் பணிகள் தாமதமாகி வருவதால், மாநகர மக்கள் பரிதவிப்புக்குள்ளாகியுள்ளனா். மாற்றாக பயன்படுத்தப்படும் தென்னூா் மேம்பாலம் பழுதாகி வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனா். எனவே, மலைக்கோட்டை மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றனர்.
இதுதொடா்பாக திருச்சி எம்பி துரை வைகோ கூறுகையில் திருச்சி மாநகரில் இரு பிரதான ரயில்வே மேம்பாலங்கள் கட்டும் பணி நடைபெறுகிறது. இதில் மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. எனவே இப்பணிகளை விரைந்து முடிக்க திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகத்திடம் அறிவுறுத்தியுள்ளேன். அப்போது ஜூன் அல்லது மே மாத இறுதிக்குள் முடிக்கும் வகையில் பணிகளை விரைவுபடுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனா்.
எனவே மலைக்கோட்டை மேம்பாலப் பணிகள் விரைவில் நிறைவுறும். தொடா்ந்து அரிஸ்டோ பாலம் அருகிலுள்ள சந்திப்பு ரயில் நிலைய மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....