அறிவிக்கப்படாத பஸ் கட்டண உயர்வு? பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் அதிர்ச்சி

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் புறநகர் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்களிடம் இருந்து புகார்கள் எழுந்துள்ளன. சாதாரண பேருந்துகளில் ரூ.5ம், ஏசி பேருந்துகளில் ரூ.10 வரையும் பேருந்து கட்டணம் எந்த அறிவிப்பும் இன்றி உயர்த்தப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பஞ்சப்பூர் பேருந்து நிலையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் கட்டணம் உயர்த்தப்படாது என்று அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆகியோர் கூறினர். ஆனால் கடந்த 4 நாட்களாகவே அரசுப் பேருந்து, தனியார் பேருந்து என்று இரண்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
1 முதல் 5 வரையிலான பஸ் ஸ்டாப்களுக்கு செல்ல ஏற்கனவே வசூலிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக ரூ.5ம், ஏசி பேருந்துகளில் ரூ.10ம் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஒன் டூ ஒன் பேருந்துகளிலும் ரூ.5 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதன்படி திருச்சி - புதுக்கோட்டை செல்லும் ஏசி பேருந்துகளில் பழைய கட்டணமாக ரூ.60 பெறப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது ரூ.70 கட்டணமாக மாற்றப்பட்டுள்ளது. சாதாரண பேருந்துகளில் ரூ.47ல் இருந்து ரூ.52ஆக கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதே திருச்சி - புதுக்கோட்டை ஒன் டூ ஒன் பேருந்துகளில் ரூ.50க்கு பதிலாக ரூ.55 கட்டணமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பேருந்துகளில் மூலம் பயணித்து கூலி வேலைக்குச் செல்வோர், பெண்கள், கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என்று பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தின் வருகையால் ஒருநாளுக்கு கூடுதலாக ரூ.20 வரை செலவு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து பஞ்சப்பூர் பேருந்து நிலையம் 9 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதற்கான டீசல் செலவை ஈடுகட்டும் வகையில் இந்த பேருந்து கட்டணம் ஒவ்வொரு பயணியிடம் இருந்தும் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்துக் கழகமும் இணைந்து இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....