திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டி அருகே வலையப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி முருகேசன். (56) இவர் மணப்பாறையில் உள்ள தனியார் வங்கியில் குழு கடனாக 40,000 கடன் தொகை பெற்றுள்ளார். இதில், மொத்தம் 24 மாதத்திற்கு 17 மாதம் கடன் தொகை செலுத்தியுள்ளார்.

மீதி ஏழு மாதங்களுக்கு பணம் கட்ட தாமதமாகி விட்ட நிலையில் முந்தைய மாதம் முருகேசன் வீட்டுக்கு சென்ற விக்னேஷ் என்ற தனியார் வங்கி ஊழியர் அங்கு இருந்த முருகேசன் மற்றும் அவரது வீட்டிலிருந்தவர்களை மிகவும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முருகேசன் உங்களிடம் பணம் செலுத்த முடியாது என்றும் வங்கிக்கு சென்று கட்டி விடுகிறேன் என்று கூறினாராம்.

அதேபோல், இந்த மாதமும் வீட்டு சென்ற வங்கி ஊழியர் விக்னேஷ், தரக்குறைவாக பேசியது மட்டுமல்லாமல் வங்கிக்கு நேராக வரவேண்டும் என்றும் இல்லையென்றால் நாங்கள் என்ன செய்வோம் என்று தெரியாது என மிரட்டல் தொனியில் பேசியுள்ளார். இதனையடுத்து, நீங்கள் முன்னால் செல்லுங்கள் நான் பேருந்தில் வருகிறேன் என்று சொல்லி முருகேசன் மினிபஸ்ஸில் மணப்பாறைக்கு பயணம் செய்திருக்கிறார்.

அப்பொழுது வங்கி ஊழியர்கள் இரண்டு பேர் மினிபஸ்ஸின் இடதுபுறமும், வலது புறமும் என பேருந்து சைடாக டூவீலரில் பின் தொடர்ந்து பாதுகாவலர் போல் சென்று உள்ளனர். முருகேசன் மணப்பாறையில் இறங்கி தனியார் வங்கிக்கு சென்றபோது அவரை தரக்குறைவாக பேசியது மட்டுமல்லாமல் வேன் ஸ்டாண்ட் பின்புறத்தில் அதாவது வங்கியின் கீழ்தளத்தில் உள்ள கார் பார்க்கிங் பகுதிக்கு அவரைப் பிடித்து சென்று சரமாரியாக அடித்தார்களாம்.

அப்போது வலி தாங்காமல் முருகேசன் கதறி அழுதுள்ளார். இந்த அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் பதறியபடி ஓடிச்சென்று வங்கி ஊழியரியரிடமிருந்து முருகேசனை மீட்டுள்ளனர். அப்போது வங்கி ஊழியர் அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்ததுடன் தாக்குதல் நடத்திய வங்கி ஊழியரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். தாக்கப்பட்ட விவசாயி முருகேசன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.