திருச்சி ஜமால் முகமது கல்லூரி ஜூலை 9-ம் தேதி பவளவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்!

திருச்சி ஜமால் முகமது கல்லூரி (தன்னாட்சி) 1951 ம் ஆண்டு ஜுலை 11-ம் தேதி என்.எம்.காஜாமியான் ராவுத்தர் மற்றும் எம்.ஜமால் முகமது சாகிப் ஆகியோரால் துவங்கப்பட்டு சாதி, மத, இன வேறுபாடின்றி ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர்கல்வியை வழங்கி 75 ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறது.
தற்போது 26 இளங்கலை, 20 முதுகலை மற்றும் 17 முனைவர் பட்ட படிப்புகளை 4000 க்கும் மேற்பட்ட மாணவிகள் உட்பட 11,000 மாணவர்களுக்கு கல்வி வழங்கி வருகிறது. குறிப்பாக NAAC ன் நான்காம் சுற்றில் CGPA 4.0 கிற்கு 3.69 புள்ளிகளுடன் A+ தரத்தினைப் பெற்றுள்ளது. மேலும் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சரவையின் NIRF தரப்பட்டியலில் அகில இந்திய அளவில் 59- வது இடத்தைப் பெற்று இக்கல்லூரி சிறந்து விளங்கி வருகிறது.
இந்நிலையில் பவளவிழா ஆண்டின் துவக்கவிழா ஜூலை 9ம் தேதி கல்லூரி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு , கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை திறந்து வைத்து, விழா பேருரையாற்ற உள்ளார். அவருக்கு சிறுபான்மை உரிமைக்காக்கும் “தகைசால் திராவிட நாயகன்” என்ற விருது கல்லூரி நிர்வாகம் சார்பாக வழங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் மாணவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோவி.செழியன், ஜமால் முகமது கல்லூரி நிர்வாகக்குழுத் தலைவர் எம்.ஜே.ஜமால் முகமது பிலால், செயலாளர் மற்றும் தாளாளர் ஏ.கே.காஜா நஜீமுதீன், பொருளாளர் எம்.ஜே. ஜமால் முகமது, உதவிச்செயலாளர் கே. அப்துல் சமது, நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் கௌரவ இயக்குநர் கே.என்.அப்துல் காதர் நிஹால், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சிவா, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் சல்மா மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....