திருச்சி மாநகரில் ரூ.290 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட காமராஜர் நூலகத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.

இந்த நூலகம் திருச்சி நகரத்திற்கு ஒரு முக்கியமான அடையாளமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் மார்ச் 21 அன்று இந்த நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். சுமார் ரூ.290 கோடி செலவில் இது கட்டப்பட்டு வருகிறது. இந்த நூலகத்திற்கு முதலில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்ட திட்டமிடப்பட்டது. ஆனால், பின்னர் முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் இது மறைந்த முதல்வர் காமராஜர் பெயரால் அழைக்கப்படும் என்று அறிவித்தார்.
சென்னையில் உள்ள பெரிய நூலகங்களுக்கு அண்ணா, கருணாநிதி, பெரியார் போன்ற தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. அதேபோல், திருச்சியில் கட்டப்படும் நூலகத்திற்கு காமராஜர் பெயர் பொருத்தமாக இருக்கும் என்று அவர் கூறினார். காமராஜர் அவர்கள் கிராமப்புற பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி, லட்சக்கணக்கான குழந்தைகள் கல்வி பெற வழி செய்தார். எனவே, அவர் பெயரை நூலகத்திற்கு வைப்பது பொருத்தமானது என்று ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.
விரைவில் இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்து பொது மக்களின் பயன்பாட்டுக்காக விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....